Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை


  

                                                           சாணக்கியரின் நேர்மை 

இந்திய வரலாற்றில் சரித்திர புகழ் பெற்ற அரசர்களுள் சந்திரகுப்தர் ஒருவர். சந்திரகுப்தரின் குருவாகவும், அரசவை தலைமை அமைச்சராகவும் சாணக்கியர் இருந்தார். அவர் ஒரு அரசியல் மேதை.

 ஒருநாள் அரசவைக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது அப்பொழுது சாணக்கியர் தம் மன்னரிடம் “குடிமக்கள் கடும் குளிரால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு அரசு செலவில் கம்பளிப் போர்வை கொடுத்து உதவ வேண்டும்” என்று கூறினார்.

“தலைமை அமைச்சர் அவர்களே தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.குளிரினால் வாடும் நம் குடிமக்களுக்கு அரசின் சார்பாக கம்பளிப் போர்வை வழங்கும் பொறுப்பை தங்களிடம் ஒப்படைக்கிறேன்”. என்றார் அரசர்.

 அதன்படியே ஏழைகளுக்கு வழங்க வேண்டிய கம்பளிப் போர்வைகளை சாணக்கியர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். செய்தி அறிந்த கொள்ளையர்கள் கம்பளி போர்வைகளைத் திருடி விற்றால் பல ஆயிரம் பொற்காசுகள் கிடைக்கும் என்று திட்டமிட்டார்கள்.

 குளிர்கால நள்ளிரவில் சாணக்கியர் வீட்டிற்கு மூன்று கொள்ளையர்களும் சென்றனர். சாணக்கியரும் அவரது தாயாரும் கிழிந்த போர்வையை போர்த்தி கொண்டு படுத்து இருந்தனர். அதை பார்த்ததும் கொள்ளையர்களுக்கு வியப்பாக இருந்தது. 

தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரை எழுப்பினர். ஐயா நாங்கள் உங்கள் வீட்டில் உள்ள கம்பளிகளைத் திருட வந்தோம்.

 “இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்து இருக்கும் போது அவற்றில் இரண்டை எடுத்துப் போர்த்திக் கொள்ளக் கூடாதா?” என்றனர்.

 அதற்கு சாணக்கியர் “அவை எங்களுக்குச் சொந்தமானவை அல்ல. அரசர் அளித்த கம்பளிப்போர்வைகள் அனைத்தும் ஏழ்மையில் வாடும் குடிமக்களுக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள். அவற்றை எப்படி என் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்த முடியும்?” என்றார்.

 திருடர்கள் சாணக்கியரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். “எங்களை மன்னித்து விடுங்கள். இனி நாங்கள் எதையும் திருட எண்ண மாட்டோம். என்று சத்தியம் செய்தனர். அத்துடன் திருட்டு தொழிலையும் விட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்ற நல்லறிவு பெற்றனர்.

 நாம் அனைவரும் சாணக்கியரைப் போல் நேர்மையையும் உண்மையையும் கடைப்பிடிப்போம்.

                                                

கேள்விகள்

1. சந்திரகுப்தரின் தலைமை அமைச்சர் யார்?

2. குடிமக்கள் அவதியுறுவது எதனால்?

3. குடிமக்களுக்கு என்ன வழங்க வேண்டும் என சாணக்கியர் அரசரிடம் கூறினார்? ஏன்?

4. குடிமக்களுக்கு கம்பளிப்போர்வை வழங்கும் பொறுப்பை அரசர் யாரிடம் ஒப்படைத்தார்?

5. குளிர்கால நள்ளிரவில் சாணக்கியர் வீட்டிற்கு யார் வந்தனர்? ஏன்?

6. தூங்கிக் கொண்டிருந்த சாணக்கியரைப் பார்த்த கொள்ளையர்கள் ஏன் வியப்பு அடைந்தனர்?

7. “இவ்வளவு புதிய கம்பளிகள் குவிந்து இருக்கும் போது அவற்றில் இரண்டை எடுத்துப் போர்த்திக் கொள்ளக் கூடாதா?” என்று யார் யாரிடம் கூறியது?

8. சாணக்கியரின் நேர்மையை இக்கதையில் இருந்து நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்?

9. திருடர்கள் மனந்திருந்த காரணமானவர் யார்?எப்படி?

10. சரியான எதிர்ச் சொல்லைத் தேர்ந்தெடுத்து

        எழுதுக:

               (     இகழ்,வெயில்காலம்,இரவு,பழைய,பேதை,பணக்காரர் )


• குளிர்காலம் × _______________.

• புதிய               × _______________.

• ஏழை               × _______________.

• மேதை            × _______________.

• புகழ்                × _______________.


Comments

Popular posts from this blog

புதிர்கள்