கட்டுரை -சென்னை


கட்டுரை -சென்னை

எனது மாவட்டத்தில் உள்ள சுற்றுலா இடங்கள் :

என்னுடைய மாவட்டம் சென்னை . இது நம் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இங்கு பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. இங்குள்ள மெரினா கடற்கரை, உலகிலேயே மிக நீண்ட கடற்கரைகளில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. சென்னை வாசிகள் ஆசையோடு பொழுதுபோக்கி மகிழும் அருமையான திறந்த வெளி இடமாகும்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் கட்டப்பட்டது புனித ஜார்ஜ் கோட்டை. இதன் வெளிப்புறத்தில் அகழி , அதனை சுற்றி மதில் சுவர்கள் உள்ளன. கோட்டையின் முன்பு மிகவும் உயரமான கொடிக்கம்பமும் உள்ளது.

அண்ணா அருங்காட்சியகம், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நினைவிடம் ஆகியவை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளன. முதல் உலகப் போரில் தனது நாட்டிற்காக இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக போர் நினைவுச் சின்னம் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு தோறும் இராணுவ தினத்தின் போது மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

எழும்பூரில் உள்ள அருங்காட்சியகம், இந்தியாவிலுள்ள பழமையான அருங்காட்சியகங்களில் இரண்டாவது இடத்தை வகிப்பது. இது 1851ல் நிறுவப்பட்டது. இது தேசிய மரபுச் செல்வங்களை காக்கும் கலைக் களஞ்சியமாக அமைந்துள்ளது.

வள்ளுவர் கோட்டம், தமிழ் மறையாம் திருக்குறளை உலகுக்கு அளித்த திருவள்ளுவரின் நினைவாக கட்டப்பட்ட கலைச் சின்னமாகும்.

சென்னை கிண்டியில் காந்தியடிகள், இராஜாஜி, காமராசர் நினைவாலயங்கள் உள்ளன. ஆசிய விளையாட்டு அரங்குகளின் அரசி’ எனப் போற்றப்படும் ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் உள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் உள்ளது. வானவியல் பற்றிய த்துகளை நுண்ணிய ஒளி, ஒலி சாதனங்களைக் கொண்டு மக்களுக்குக் குறிப்பாக மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிக்கும் இடமான கோளரங்கம், கோட்டூர்புரத்தில் உள்ளது.

காளிகாம்பாள் கோவில், கந்த கோட்டம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், வடபழனியில் உள்ள முருகர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், ஸ்ரீ மஹா ப்ரத்யங்கரா தேவி ஆலயம், கோயம்பேடு குறுங்காலீசுரவர் கோவில் என பல ஆன்மிகத்தலங்கள் நிறைந்தது எங்கள் சென்னை மாவட்டம்.


 

Comments

Popular posts from this blog

புதிர்கள்

Tamil comprehension - சாணக்கியரின் நேர்மை